இந்திய கலாச்சாரத்தில் திருவிழாக்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் தங்கம் வாங்குவது என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு உன்னத பாரம்பரியமாக இருந்து வருகிறது. நம் நாட்டில் தங்கம் வாங்குவது என்பது வெறும் ஒரு முதலீடாகவோ அல்லது சேமிப்பாக்போ மட்டும் பார்க்கப்படுவதில்லை, அது ஒரு குடும்பத்தின் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வரை சேமித்து வைத்திருக்கலாம், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் அதற்கு வருமான வரித்துறை மூலம் அபராதம் ஏதேனும் விதிக்கப்படுமா என்ற பலத்த சந்தேகங்களும் கேள்விகளும் பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளன. இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை நாம் விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
சட்ட வரம்பும் ஆவணங்களின் அவசியமும்
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மற்றும் இந்திய வருமான வரித்துறை ஆகியவை தங்கம் வைத்திருப்பது தொடர்பாகச் சில மிக முக்கிய வழிகாட்டுதல் விதிகளை வகுத்துள்ளன. பொதுவாகப் பார்க்கும்போது, இந்தியாவில் ஒரு குடிமகன் தனது வீட்டில் வைத்திருக்கக்கூடிய மொத்த தங்கத்தின் அளவிற்கு என்று தனியாக எவ்வித சட்ட வரம்போ அல்லது உச்ச வரம்போ கிடையாது. யார் வேண்டுமானாலும் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். ஆனால், அதற்கு ஒரே ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அந்தத் தங்கம் எந்தப் பணத்தில் வாங்கப்பட்டது, எவ்வாறு நமக்குக் கிடைத்தது என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் நம்மிடம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஆணித்தரமாகக் கூறுகிறது.
ஆதாரங்கள் இல்லாவிட்டால் பறிமுதல் அபாயம்
வருமான வரித்துறையினர் திடீர் சோதனைகளை மேற்கொள்ளும்போது, வீட்டில் இருக்கும் தங்கத்திற்குப் பொருத்தமான மற்றும் சரியான ஆவணங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், அந்தத் தங்கமானது கணக்கில் காட்டப்படாத சட்டவிரோத சொத்தாகக் கருதப்படும் அபாயம் உள்ளது. முறையான கணக்கு இல்லாத அத்தகைய தங்கம் அதிகாரிகளால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படலாம்; அதோடு மட்டுமன்றி அதற்கு மிகக் கடுமையான அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகத் தங்கம் வீட்டில் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கியதற்கான அசல் பில் (Bill), அதற்கான வருமான ஆதாரம், ஒருவேளை அது பரம்பரை சொத்தாகவோ அல்லது பரிசாகவோ வந்திருந்தால் அதைக் குறிக்கும் சட்டப்பூர்வ ஆதாரங்கள் ஆகியவற்றை நாம் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு 500 கிராம்... ஆண்களுக்கு எவ்வளவு?
முறையான வருமான ஆதாரங்கள் இல்லாத நிலவிலும் கூட, ஒரு குடும்பத்தில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்படக் கூடாத தங்கத்தின் அளவை வருமான வரித்துறை தனித்தனியாக வகைப்படுத்தியுள்ளது. இதற்காகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று பிரத்யேக அளவுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறையின் தற்போதைய விதிமுறைகளின்படி, திருமணமான ஒரு பெண் தனது வீட்டில் அதிகபட்சமாக 500 கிராம் வரை எவ்வித கணக்கும் இன்றி தங்கம் வைத்திருக்கலாம். அதேபோல, திருமணமாகாத பெண்களுக்கு 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குத் திருமணமாகி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் அதிகபட்சமாக 100 கிராம் வரை மட்டுமே தங்கம் வைத்திருக்க அனுமதி உண்டு. இந்த வரம்பிற்குள் இருக்கும் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ய மாட்டார்கள்.
