இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் விநியோகத் திட்டத்தில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு ஒரு நவீனத் தீர்வை முன்னெடுத்துள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் 'தானிய ஏடிஎம்' (Grain ATM) என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
24 மணி நேரமும் அரிசி பெறலாம்
'அன்னபூர்த்தி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தானியங்கி இயந்திரம், வெறும் 35 விநாடிகளில் 25 கிலோ அரிசியைத் துல்லியமாக விநியோகிக்கும் திறன் கொண்டது. இதற்கென ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தனித்துவமான 'டிஜிட்டல் கார்டு' வழங்கப்படும். பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் எடுப்பது போலவே, இந்த அட்டையைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தானியங்களை எந்த நேரத்திலும் (24 மணி நேரமும்) பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி
பொதுமக்கள் தரப்பில் இருந்து ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் எழும் புகார்களைத் தீர்க்க இந்த ஏடிஎம் முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, தகுதியுள்ள அட்டைதாரர்களுக்கு உரிய அளவு பொருட்கள் நேரடியாகச் சென்றடைவதை இந்தத் தானியங்கி இயந்திரங்கள் உறுதி செய்யும். இதன் மூலம் ஒட்டுமொத்த ரேஷன் விநியோக நடைமுறையும் முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
