சர்வதேச அரசியல் சூழல் மற்றும் மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாகத் தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதனால் நேற்று சரிவைக் கண்ட தங்கம் விலை, இன்று மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,220-க்கும், ஒரு பவுன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,24,104-ஆகவும், 18 காரட் தங்கம் ரூ.94,920-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.
