புளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தைத் தொழிலதிபர் கவுதம் அதானி மீண்டும் பிடித்துள்ளார். நீண்ட காலமாக முதலிடத்தில் நீடித்து வந்த முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி அதானி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 92.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசிய அளவில் முதலிடத்தையும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 19-வது இடத்தையும் அவர் எட்டியுள்ளார். மறுபுறம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதால், அவர் ஆசிய அளவில் இரண்டாம் இடத்திற்கும், உலக அளவில் 20-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி
இந்த ஆண்டில் மட்டும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 8.1 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று நடைபெற்ற ஒரே நாள் வர்த்தகத்தில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 3.56 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவிய போதிலும், அதானி குழும நிறுவனப் பங்குகள் காட்டிய சிறப்பான முன்னேற்றமே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அதானி குழுமம் தற்போது துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி, தரவு மையங்கள், சிமெண்ட் மற்றும் பாதுகாப்புத் துறை எனப் பல்வேறு துறைகளில் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவைச் சந்தித்த நிலையிலும் அதானியின் இந்த வளர்ச்சி கவனம் பெற்றுள்ளது.
