இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப்பெரிய நிம்மதியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள், இனிமேல் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், வியாபாரிகள் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் நிதியாயோக் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முக்கிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதியாண்டு முதல் புதிய வருவாய் வரம்பு
வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின் படி, அடிப்படைப் பதிவு பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 12 லட்சத்திலிருந்து 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி 1.5 கோடி வரை வருமானம் ஈட்டும் சிறு வணிகர்கள் அடிப்படைப் பதிவு செய்தாலே போதுமானது. அதேபோல் 50 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் மாநில உரிமத்தின் கீழும், அதற்கு மேல் வருவாய் உள்ளவர்கள் மத்திய உரிமத்தின் கீழும் வருவார்கள். மேலும், தெருவோர வியாபாரிகள் மாநகராட்சிகளில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், அவர்கள் தானாகவே எப்எஸ்எஸ்ஏஐ-ல் பதிவு செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த இரட்டைப் பதிவு நீக்கத்தால் சுமார் 10 லட்சம் வியாபாரிகள் பயனடைவார்கள்.
