மகேந்திர சிங் தோனி பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்திய தனிநபர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, 2025–26 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்தியவராக திகழ்ந்துள்ளார்.
பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான வருமான வரித்துறையின் முதல் முதன்மை ஆணையர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 2025–26 நிதியாண்டில் இரண்டு மாநிலங்களிலிருந்தும் மொத்தமாக சுமார் ரூ.20,000 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து மட்டும் ரூ.12,000 கோடி வருமான வரி வசூலாகியுள்ளதாகவும், மீதமுள்ள தொகை பீஹாரிலிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தனிநபர் வருமான வரி செலுத்துநர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராஞ்சியைச் சேர்ந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அதிக வருமான வரி செலுத்துவோரில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது
