ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முன்னணி மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான கிரியேட்டிவ் மெடிக் (Creative Medic), இந்தியாவில் தனது நேரடி விற்பனை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை நகரில் இந்திய தலைமையகத்தை நிறுவியுள்ளது.
முன்னதாக ‘மெடி நிப்பான்’ என்ற வினியோகஸ்தர் மூலம் இந்திய சந்தையில் இயங்கி வந்த நிறுவனம், தற்போது நேரடி வணிக முறைமைக்கு மாறியுள்ளது. இந்தியாவில் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகரித்த தேவையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உற்பத்தி நிலையங்களை அமைத்து, இங்கிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிறுவனத்தின் தலைவர் ஓசாம் இமாசாவா கூறுகையில், இந்தியாவின் மருத்துவத் துறை வளர்ச்சி பெறும் நிலையில் இருப்பதால், இந்த சந்தையில் முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய நிர்வாக இயக்குநர் கட்ஸ் வாஹி யாமன் கூறுகையில், இந்திய மருத்துவர்களுடன் இணைந்து, உள்ளூர் தேவைகளுக்கேற்ப புதுமையான கருவிகளை உருவாக்கும் நோக்கம் இருப்பதாக கூறினார். மேலும், குறுகிய காலத்தில் ரூ.20 கோடி வர்த்தக இலக்கு மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டாடா மெமோரியல் மருத்துவமனை, எய்ம்ஸ், அப்பல்லோ, புரோட்டான் உள்ளிட்ட முன்னணி மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே இந்த நிறுவனம் தனது உபகரணங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
