மத்திய அரசு எடுத்துள்ள புதிய முடிவின்படி, 5 கிலோ எடையுள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர்களை வாங்குவதற்கு இனி முகவரி சான்று (Address Proof) சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறிய ரக சிலிண்டர்களைப் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இனி ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை (ID Card) மட்டும் காண்பித்து 5 கிலோ சிலிண்டரைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்குப் பயன்?
முன்னதாக, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், முகவரி சான்று இன்றி அடையாள அட்டையின் அடிப்படையில் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது மத்திய அரசின் இந்த விரிவான முடிவு, வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து 5 கிலோ சிலிண்டர்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் மேலாண்மை
உலகளாவிய அரசியல் சிக்கல்கள் காரணமாக எல்பிஜி விநியோகம் சற்றே பாதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டில் தற்போதைக்கு எரிவாயு பற்றாக்குறை ஏதுமில்லை என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தேவையற்ற முறையில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எல்பிஜி தேவையைக் கட்டுக்குள் வைக்க மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற மாற்று எரிபொருட்களின் விநியோகத்தையும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
