சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த திட்டம், விசாகப்பட்டினம் கடலோரப் பகுதிக்கு அருகிலுள்ள அடவிவரம், தாலுகா வாடா மற்றும் ராம்பில்லி உள்ளிட்ட மூன்று இடங்களில், மொத்தம் 601 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்காக மாநில அரசு ஏற்கனவே 601.4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார்.
இந்த டேட்டா சென்டர் 2028 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஜிகாவாட் மின்சார திறனை கொண்டதாக அமைக்கப்படும் இந்த மையம், ஆசியாவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய அளவிலான தரவு செயலாக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட மையமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், கிளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தரவு சேமிப்பு மற்றும் மேம்பட்ட கணினி செயலாக்கம் போன்ற பல்வேறு துறைகளுக்கு இந்த மையம் ஆதரவளிக்கும். உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்புகளுடன் இணைக்கும் கடலடிக் கேபிள் இணைப்புகள் மற்றும் அதிவேக ஃபைபர் நெட்வொர்க் வசதிகளும் இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கும், இந்தியாவிற்கும் மிகப்பெரிய டிஜிட்டல் உட்கட்டமைப்பு முன்னேற்றமாக அமையும் என்றும், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
