அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL), 2026-ஆம் நிதியாண்டிற்கான தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட நிகர லாபம் (Adjusted Net Profit) கடந்த ஆண்டை விட 32 சதவீதம் அதிகரித்து 2,393 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எபிட்டா (EBITDA) வளர்ச்சியும், தேய்மான விகிதம் சீராக இருந்ததும் இந்த லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
வருவாய் மற்றும் செயல்பாட்டுத் திறன்
நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமான எபிட்டா 12.7 சதவீதம் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 8,726 கோடி ரூபாயை எட்டியுள்ளது. மின் கடத்துதல் (Transmission) மற்றும் ஸ்மார்ட் மீட்டர் பிரிவுகளில் நிலவும் வலுவான வளர்ச்சியே இதற்கு அடிப்படையாக அமைந்தது. அதேபோல், நிறுவனத்தின் மொத்த வருவாய் 15.9 சதவீதம் அதிகரித்து, சாதனை அளவாக 28,325 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. அதிகப்படியான மூலதனச் செலவுகள் (Capex) மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறனே இந்த வருவாய் வளர்ச்சிக்குக் காரணம் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மும்பை திட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் மைல்கல்
இது குறித்து அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கந்தர்ப் படேல் கூறுகையில், "2026 நிதியாண்டில் எங்களின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்துள்ளன. குறிப்பாக நான்காம் காலாண்டில் மும்பை எச்.வி.டி.சி (HVDC) திட்டம் உட்பட ஐந்து மின் கடத்துதல் திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் இரண்டு எச்.வி.டி.சி திட்டங்களைச் செயல்படுத்திய ஒரே தனியார் நிறுவனம் என்ற பெருமையை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், இந்த ஆண்டில் 1 கோடி ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி வலிமை
கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மூலதனச் செலவு 1.24 மடங்கு அதிகரித்து 14,232 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது நிறுவனத்தின் வசம் 71,779 கோடி ரூபாய் மதிப்பிலான மின் கடத்துதல் திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன. ஸ்மார்ட் மீட்டர் பிரிவில் 2.46 கோடி மீட்டர்களுக்கான ஆர்டர்கள் கையிருப்பில் உள்ளன, இதன் மூலம் சுமார் 29,519 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஜப்பான் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (JCR), அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 'BBB+' மதிப்பீட்டை வழங்கியுள்ளது, இது நிறுவனத்தின் நிதி ஒழுக்கத்தையும் வலிமையான கடன் தகுதியையும் உறுதிப்படுத்துகிறது.
